Saturday, June 21, 2014

நிறமி

பரபரப்பாக இயங்க தயாராகிக் கொண்டிருக்கும் திருப்பதி கோர்ட்..

கொஞ்சமும் கோர்ட் சூழலுக்கு சம்பந்தமே இல்லாமல் வெள்ளிக்கிழமை ஐடி ஊழியனாக அங்கே நான். ஏன் எதற்கென்ற கேள்வியே கேட்காமல் 'மச்சான் கெளம்புடா' என்ற ஒற்றை வார்த்தைக்கு மரியாதை கொடுத்து கூட வந்த என் நண்பன். அனேகமாக அந்த கோர்ட்டையே அன்றைக்கு திறந்து வைத்தது நாங்களாகத் தான் இருப்போம். சிறுவர் சிறைச்சாலையும் கோர்ட்டும் ஒருங்கிணைந்த ஆங்கிலேய பாணியிலான அரத பழசான கட்டிடம் அது. அடைக்கலம் கொடுத்தது அங்கிருந்த பழுப்பேறிய பெஞ்ச் . கரையும் காகங்களையும், காற்றடித்தால் மட்டும் பேசி சிரித்துக்கொள்ளும் அரச மர இலைகளையும் எங்களையும் தவிர அங்கே வேறாரும் இல்லை.  சிறிது நேரம் கழித்து ஒரு பெண்மணி கோர்ட் வளாகத்தை சுத்தப்படுத்த ஆரம்பித்திருந்தாள். அவள் சுத்தப்படுத்துவது நிறமிழந்த அரச மர இலைகளை மட்டுமல்ல - வழக்கறிஞர்கள் வாரியிறைத்திருந்த பொய்களையும் சேர்த்து தான். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. காவல் நிலைய படிகளையோ, கோர்ட் வாசலையோ மிதிக்காத குடும்பத்தைச் சேர்ந்த என்னை கைதியாக்கி அழகு பார்த்திருக்கிறது - அதுவும் மொழி தெரியாத மாநிலத்தில். கடிவாளமில்லா சிந்தனை அலைகளோடு மோட்டுவளையை வெறித்துக்கொண்டிருக்கிறேன்.

"என்ன மச்சான்.. இந்த தடவையாவது ஜட்ஜ்மென்ட் சொல்வாங்களா?.. இல்ல வாய்தா தானா?"- மவுனம் கலைத்தான் நண்பன்.

பதிலேதும் சொல்லவில்லை. உண்மையில் பதிலேதும் என்னிடம் இல்லை. இது ஐந்தாவது வாய்தா. அந்த சம்பவம் நடந்து ஐந்தாறு மாதங்கள் இருக்கும். திருமலையிலிருந்து  திருப்பதி செல்லும் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் 29 வது கொண்டை ஊசி வளைவில் பள்ளத்தில் உருண்டது - வழக்கு பதிந்து, டிரைவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்ற செய்தி கண்டிப்பாக உள்ளூர் செய்தி தாள்களில் இடம்பிடித்திருக்கும். என்ன செய்ய, என் சாதனையை என்னாலேயே படித்து தெரிந்துகொள்ள முடியவில்லை. மொழியைத் தான் சபிக்க வேண்டியிருக்கிறது. தெலுங்கானா போராட்டம் - வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு இன்ன பிற இன்னல்களையும் தாண்டி பெயில் வாங்கிய காட்சிகள் ரோலர் கோஸ்டராய் சுழன்றடித்தது நினைவுகளில். இரண்டு பேர் மட்டும் இருந்த அந்த இடத்தில் இப்போது புதிதாக இன்னும் நான்கைந்து தெலுங்கு முகங்கள். கையில் தூக்கு வாளியுடன் எதையோ எதிர்பார்த்த படி ஒரு நடுத்தர வயது பெண்ணும்.

நேரம் ஆக ஆக பரபரப்பு தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த கூட்டம் இப்போது ஆலமர விழுதுகளைப் போல மாறிவிட்டிருந்தது. ஒவ்வொரு சிறு கூட்டமும் ஒரு வக்கீலைப் பிடித்து மொய்த்துக்கொண்டிருந்தது. நானும் எனது வக்கிலைத் தேடினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரின் சுவடுகள் தென்படவே இல்லை. செல்போனில் தொடர்பு கொண்டேன் - "சார். ஐ யாம் தனா. க்ரைம் நம்பர் 28/13. பிளாக் கலர் கார் - ஆக்சிடன்ட் திருமலா " - மூன்றாம் பிறை சுப்புரமனியாகவே மாறிவிட்டிருந்தான். "ஆவுனா. நீங்கொ அக்கடையே கூச்சண்டி. கமிங் கமிங்" அவருக்கு தெரிந்த தமிழில்.

இதற்கிடையே கோர்ட் கான்ஸ்டபிள் முனீஸ், வழக்கமான சிரிப்போடு நெருங்கிவிட்டிருந்தார். வக்கிலை விட இவர் பேசும் தெலுகுத்தமிழ் எனக்கு ரொம்பவே பழக்கமாயிருந்தது. "தன்செகார், டோன்டி எய்ட் தான. இன்னிக்கு முட்ச்சிட்லாம்...". பலமுறை கேட்ட வசனம் தான். முதல் முறை போலவே தலையாட்டி வைத்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறைக்கு முன்பாக இருப்பதை போன்றதொரு உணர்வு. இன்னைக்கு கேஸ் முடிஞ்சிட்டா, இதுக்கப்புறம் இந்தபக்கமே வரக்கூடாது என்ற சபதத்தை ஐந்தாவது முறையாகவும் எடுத்துக்கொண்டேன்.  எல்லாரும் அவரவர் வக்கீலுடன் ஆலோசித்தபடி இருக்க அந்த தூக்குவாளி பெண் மட்டும் யாருடனும் எதுவும் பேசாமல் இருந்தார். ஊமையாய் இருக்கும்போல என நினைத்துக்கொண்டு வக்கீலுக்காக வழி பார்த்துக்கொண்டிருந்தான் .

 கான்ஸ்டபிள் முனீஸ் என்னையும், இன்னும் மூன்று பேரையும் மட்டும் அழைத்தார். முதலில் கிரிமினல் கேஸ்கள் விசாரிக்கப்படும். பிறகு டிராபிக் கேஸ்கள். இதுதான் அந்த அழைப்பின் சாராம்சம். இதைப்போலவே கிரிமினல் கேஸ்களுக்கென ஒரு கோர்ட் கான்ஸ்டபிள் அவருடைய அன்றைய வாடிக்கையாளர்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார். இரு அழைப்புகளிலுமே அந்த தூக்குவாளி பெண் இல்லை. இது எதோ அம்மன் கோயில் கிழக்காலே கதையாக இருக்குமோ என்ற ஆவல் இன்னும் அதிகமாகவே அந்த பெண்மணியை கவனிக்க ஆரம்பித்தான். ஓடிசலான தேகம். சொல்லிக்கொள்ளுமளவுக்கு அணிகலன்கள் இல்லை. அநேக கோயில்களில் தென்படும் பூ கட்டும் அம்மா சாயலில் தான் இருந்தார். நெருங்கி பேசலாம் தான். ஆனால் மொழி?!.

     எனக்கிருக்கும் வினோதமான பழக்கங்களில் ஒன்று இது. சில சமயங்களில் பேருந்து பயணங்களின்போது ஜன்னல் வழியே எட்டி பார்ப்பதுண்டு. எதிர்படும் வித்தியாசமான மனிதரின் பார்வையில் உலகம் அடுத்த சில நொடிகள் எப்படி இயங்கும் என்பதை மனத்திரையில் ஓட்டிப்பார்ப்பேன்.  விநோதமாய் இருந்தாலும், வேடிக்கையாய் இருக்கும். ஆனால் இந்த பெண், கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக பரபரப்பான கோர்ட் வாசலில் ஒரு ஜென் துறவியைப் போல இருக்கிறார். அடுத்து என்ன செய்வார் என்பதே யூகிக்க முடியவில்லை.


'சைலன்ஸ்..' டவாலியின் குரல். அந்த சில நூறு பேர் கொண்ட கூட்டத்தின் வழியே புகுந்து அமைதியை தேடிக்கொண்டுவந்தது. என் சிந்தனைக் குளத்திலும் கல்லெறிந்தது. இது வழக்கமாக நீதியரசரின் வருகையை அறிவிக்கும் ஒரு வழி. பக்கத்திலிருந்த சிறுவர் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்து இப்போது மன்ற வாசலுக்கு முன் நிறுத்தப்பட்டனர். ஐந்து சிறுவர்கள், தலை வாரி எப்படியும் நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம். ஒரே நீண்ட சங்கிலியால் ஐவருமே பினைக்கப்பட்டிருந்தனர். ஒருவனுக்கு தலையை சுற்றிலும் பெரிய மருதுவக்கட்டு. பெரும்பாலும் கிழிசலான, அழுக்கான உடைகள் தான். முன்னைக்காட்டிலும் கோர்ட் அதிக பரபரப்படைந்திருந்தது இப்போது. நீதியரசரும் இன்னபிற வக்கீல்களும் கன நேரத்தில் ஆஜராகிவிட்டிருந்தனர். வழக்காடும் காட்சிகள் ஆரம்பமாகிவிட்டன. 'வேங்கடகிருஷ்ணன் வகையராலு...' டவாலியின் குரல். நான்கு ஆஜானுபாகுவான ஆட்கள் குடுகுடுவென ஓடி நீதியரசர் முன்பு கை கூப்பி நின்றனர். அதிகமாக தமிழ் சினிமா பார்ப்பவர்களால் உண்மையான கோர்ட் சீன்களை உடனடியாக ஜீரணிக்க முடியாது. தமிழ் சினிமா கற்றுக்கொடுத்த தவறான கற்பிதங்களில் முக்கியமானது  நீதிமன்றங்களும் வழக்காடும் காட்சிகளும் தான். உண்மையில் குற்றம் சாட்டப்பட்டவர், செருப்பு அணிந்திருக்கக் கூடாது, கை கூப்பிய நிலை தான் முழுவதும். ஒரு வழக்குக்கான அதிகபட்ச நேரம் என்பது குழந்தைகள் ஐஸ்க்ரீம் சாப்பிடும் நேரம் தான். பராசக்தி பாணி வசனங்களை படிக்கவோ கேட்கவோ வாய்ப்பே இல்லை.

சுமார் இருபது நிமடங்களில் கூட்டம் கணிசமாய் குறைந்திருந்தது. என் வழக்கு அடுத்த வாய்தாவுக்கு தள்ளிபோடப்பட்டது. வழக்கு பரபரப்பில் சற்றே மறந்திருந்த அந்த தூக்கு வாளி பெண்ணை கண்கள் தேடியது. அதே இடத்தில் எதையோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார். கோர்ட் கான்ஸ்டபிளுக்கு அன்றைய கப்பத்தைக் கட்டிவிட்டு அந்த பெண்ணைப் பற்றி விசாரித்தேன். "அ அம்மாயி... பிச்சி சார்" என்று காதுக்கும் வலது கண்ணுக்கும் இடையே ஆட்காட்டி விரலை சுழற்றினார். சிறார் சிறையிலிருந்து சென்ற வாரம் தப்பி ஓடும்போது அவர் மகன் இறந்துவிட்டதாகவும், அந்த மகனுக்காக தான் தினமும் சாப்பாடு எடுத்துவருவதாகவும் சொன்னார். அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு காலம் காலமாக கிடைக்கக்கூடிய அடைமொழி இது தான். இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. மிகநீண்டதொரு பெருமூச்சுடன் கிளம்ப எத்தனிக்கிறேன்.

கடைசியாக ஒருமுறை அந்த பெண்ணை பார்க்கிறேன். வேகமாக மனத்திரை சுழல்கிறது. அந்த பெண்ணின் பார்வையில் அடுத்த சில நொடிகளில் உலகம், இறந்து போன அந்த மகனை கண்டிப்பாக உயிர்ப்பித்திருக்கும். அந்த தூக்கு வாளியின் கணமும் குறைந்திருக்கும்...





















Friday, May 17, 2013

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..

        அலுவலக கடுப்புகளுக்கு இடையே [அலுவலகம்னாலே கடுப்பு தானே ] பாடல் கேட்கும் எண்ணம் மேலிட - எப்போதும் கேட்கும் எம்ஜிஆர் மெலடிக்கு பதிலாக நீண்ட நாட்களாய் தொடாமல் இருக்கும் ரகுமான் ஹிட்ஸ் ஆல்பத்தை ஓடவிட்டேன். கொலம்பஸ், என்ன விலை அழகே போன்ற நல்ல பாடல்களும் அலுவலில் மூழ்கி இருந்த என் காது சவ்வுகளை தாண்டவில்லை.திடீரென ஸ்வர வரிசைகளுடன் ஆரம்பமானது அந்த பாடல் - சௌக்கியமா  கண்ணே  சௌக்கியமா.. சடாரென பெய்தமழையில்  முழுதும் நனைந்த சாலைவாசியாகிப் போனது மனது. பாடல் முடிந்த பிறகு ஏதோ கர்நாடக கான சபையிலிருந்து திடீரென வெளித்தள்ளப்பட்டதைப் போன்றதொரு உணர்வு. பாடலை மறுபடியும் ஓடவிட்டு ரிப்பீட் மோட் தட்டிவிட்டேன்.

    இன்றைய தேதிக்கு அந்த படம் - பாடல் வெளியாகி எப்படியும் 15 வருடங்கள் ஆகியிருக்கும் . நானும் எத்தனையோ தடைவை இந்த பாடலை கடந்து [கவனித்து அல்ல ] வந்திருக்கிறேன் . நித்யஸ்ரீ-யின் கனீர் குரல் பாடலில் கட்டிப்போட்டுவிட்டதென்றால், வைரமுத்து  காதலில் நனைத்து எடுத்த பேனாவில் கவிதை எழுதியிருப்பார் போல. பேனா மை சுரக்கவில்லை. காதல் சுரந்திருக்கிறது. ரகுமானின் இசைக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாகவே காதலை சுரக்கும் பேனா அது. சவுக்கியமா கண்ணே என தலைவனை நலம் விசாரிக்கும் தலைவி சடசடவென ஸ்வர வரிசைக்குள்  புகுந்து  கண்ணில் விழுந்து இதயம் எழுந்து உயிரைப் பறித்த காதலைச் சொல்கிறாள் .

சௌக்கியமா கண்ணே 
சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
தன தன தோம் தனத்தோம் 
திக்கு திக்குதன தன தோம் தனத்தோம் 
திக்கு திக்குதன தன தோம் தனத்தோம்தன 
தன தோம் தனம்தோம்தா தீமினா
விழிகளில் நடனமி்ட்டாய் 
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்

வழக்கமாய் மாலைகள் தான் தழுவும். காதல் வந்த தலைவிக்கு அம்பு கூட தழுவத்தான் செய்கிறதாம். போலவே பருவம் கொத்திச்  சென்ற பறவை என தலைவனைச் சொன்னவர் சில பல ஸ்வர ஜதிகளை இட்டுநிரப்பி சலங்கையும் ஏங்குதே - அது கிடக்கட்டும் நீ சௌக்கியமா என்கிறார். நித்யஸ்ரீ விளாசிய இந்த சிக்சர் அலுவலக வேலையை சுத்தமாய் மறக்கடிக்க செய்திருந்தது. அதுவும் போகிறபோக்கில் சலங்கையும் ஏங்குகிறது - அது கிடக்கட்டும் நீ... என  மூச்சிழுத்து  பாடி என்னை வேறோர் உலகிற்கு அழைத்து சென்றுகொண்டிருந்தார்.. எழுத்துக்களை ரசிப்பதா இல்லை குரலை ரசிப்பதா என்ற குழப்பத்தில் ரகுமான் காணாமலே போயிருந்தார். 


ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்

சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ 
(சௌக்கியமா...)

சற்றே மூச்சு வாங்கி அடுத்தடுத்த வரிகளையும் கவனித்தேன். இதுவரைக்கும் பாடகியின்பால் பரிவு கொண்டிருந்த வைரமுத்து, இப்போது  சிக்சர்களாய்  விளாச ஆரம்பித்திருந்தார். சாம்பிளுக்கு சில..

சூரியன் வந்து வாவெனும் போது

என்ன செய்யும் இந்த பனியின் துளி...

என் காற்றில் சுவாசம் இல்லை...

பசலை நோய் பற்றி ஆயிரம் தமிழ் வாத்தியார்கள் அகநானூறு எடுத்தாலும் கீழே உள்ள வரிகளுக்கு ஈடாகுமா என்பது சந்தேகமே.. 

அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம்

வளையலாகவே துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமென அன்பே அழைத்தேன்     

மறுபடியும் நித்யஸ்ரீ ஸ்வர வரிசைக்கும் புகுந்து அந்த ரோலர் கோஸ்டர் ரைடை  முடித்து வைத்தார். சுமார் 7 மணி நேரமாக மனதுக்குள் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது இந்த பாடல் - ரிப்பீட் மோட் மாற்றக் கூட கை வாராமல்.. 




Thursday, May 17, 2012

கிடார் குறிப்புகள்...


சரியாக 2008ம் வருடம், நவம்பர் என்று நினைக்கிறேன். வாரணம் ஆயிரம் என்ற சூரியா நடித்த படம் திரைக்கு வந்தது. சென்னை எனக்கு பழக்கமாக ஆரம்பித்திருந்த காலம்.. கொஞ்சம் ஐடி வாசனையும் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்த நேரமது. குரோம்பேட் வெற்றி திரை அரங்கில் வாராந்திர பாஸ் வைத்திருந்த சூழலில் அந்த படத்தை முதல் சனிக்கிழமை மாலைக்காட்சி பார்த்ததில் வியப்பேதும் இல்லை. படம் என்னவோ அப்பா-மகன் பாசத்தை பற்றியதுதான் என்றாலும் அன்னப்பறவை போல பிரித்தறிந்து நான் உள்வாங்கிக்கொண்ட ஒரே விஷயம் கிட்டார். படம் முடிந்த பிறகு நான் செய்த முதல் விஷயம் கிடாருக்கான ஸ்பெல்லிங் தேடியதுதான்.






இச்சமயத்தில் ஐடி ரெசெஷன் ஆரம்பித்து பெஞ்ச் தேய்க்க ஆரம்பித்திருந்தேன். முழுநேர ஓய்வுக்கு இடையில் ஓய்வு கெடைக்கும்போதெல்லாம் கிடார் பற்றிய வீடியோக்களை யூட்யூப்பில் பார்ப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தேன். பின்னர் வியர்வை வழிய கூகிளில் அலைந்து திரிந்து ஒரு கிடார் மாஸ்டர் தாம்பரத்தில் இருப்பதை தெரிந்துகொண்டேன். இன்னமும் ஆரம்பிக்காத எக்ஸாமுக்கு அடிஷனல் ஷீட் கேட்கும் ஆர்வக்கோளாறாய், மூன்று மாத அட்வான்ஸ் ஃபீஸ் கட்டி சேர்ந்துவிட்டேன். வாரத்திற்கு மூன்று நாள் கிடார் க்ளாஸ் என ஆறு மாதத்தில் கிடார் வாசிக்க கற்றுக்கொள்ளலாம் என்ற மாஸ்டரின் வார்த்தைகள் தலைகால் புரியாமல் ஆட வைத்தது.


முதல்நாள் மியூசிக் கிளாஸ்.. நான் எதிர்பார்த்தை போலவே எல்லாரும் ஆண்கள். என்னை விட சிறியவர்கள். தவிரவும் கையில் ஒரு கிடாருடன் வட்டவடிவமாக உட்கார்ந்து மின்னலே படத்திலிருந்து 'இரு விழி உனது' பாடலை வாசித்துக்கொண்டிருந்தார்கள். இப்போதுதான் கல்லூரியில் அடியெடுத்த வைத்தவனைப்போல இருந்த ஒருவன் திடீரென என்னைப்பார்த்து "அண்ணா, நீங்க எந்த இயர்?" என்றான். பைனல் இயர் என்று கூறி ஒருவாறாக சமாளித்துக்கொண்டேன்.என்னைபோலவே கிடரை எப்படி பிடிக்க வேண்டுமென கூட தெரியாத இருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.கிடாரின் அனாடமி பற்றிய படங்களோடு அன்றைய வகுப்பும், மாஸ்டர் தரும் கிடாரில் ஜின்கிள் பெல் வாசித்தே முதலிரண்டு வாரங்களும் கடந்தன.

இதற்கிடையே எந்த பாடலை கேட்டாலும் அதில் கிடார் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என மனம் ஆராயத்தொடங்கி இருந்தது.சில புதிய நண்பர்களின் பழக்கதோஷத்தால் சி மேஜர், எ மைனர் போன்ற வார்த்தைகள் பழக்கமாயின . மூன்றாவது வாரத்தின் முதல்நாளில் எனக்கொரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடன் கிடார் வாசிக்க கற்றுக்கொள்ள ஆரம்பித்த ஒருவன் திடீரென நெஞ்சிக்குள் பெய்திடும் மாமழை பாடலின் ஆரம்ப இசையை வாசித்துக்காட்டினான். ஆச்சரியல் மேலிட அவனை விசாரித்தபோது, தன்னிடம் சொந்தமாக கிடார் இருப்பதால் இடைவிடாமல் பயிற்சி செய்து கற்றுக்கொண்டதாக தெரிவித்தான். எனக்குள் இருந்த படைப்பாளி பெருங்குரலெடுத்து கூச்சலிட ஆரம்பித்தான். இரண்டு வாரங்கள் முடிந்தும் இன்னும் ஜிங்கில் பெல்லிலே ததிங்கினத்தோம் போடுவதற்கு காரணம் சொந்தமாக கிடார் இல்லாததே என முடிவுக்கு வந்துவிட்டான் அந்த படைப்பாளி. அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த படைப்பாளி என்னை கொண்டு போய் நிறுத்திய இடம் - வடபழனி லக்ஷ்மன்சுருதி. எல்லா கிடாருமே நன்றாக இருந்தாலும் விலை தவறாக பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதாக பர்ஸ் எண்ணியதால், அதே பகுதியிலுள்ள சரஸ்வதி இசைக்கூடத்திற்கு சென்று, என் பர்சுக்கும் படைப்பாளிக்கும் பிடித்த வகையிலான ஒரு கிடாரை வாங்கிகொண்டு பெருமிதம் வழிய அடுத்த வகுப்பிற்கு சென்றேன்.எவ்வளவு முயன்றும் ஜிங்கில் பெல்லை தாண்டுவது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது

மூன்றாவது வாரத்தில் சில பல மேஜர், மைனர் நோட்களை நோட்ஸ் பார்த்தும் தப்பும் தவறுமாக வாசிக்க பழகிக்கொண்டிருந்தேன். நாள் தவறாமல் கிடாருடன் ஒரு போட்டோ எடுப்பதை வழக்கமாக்கி இருந்தேன். எனக்குள் இருந்த படைப்பாளி நேரம் காலம் இன்னதென்று இல்லாமல் எந்நேரமும் எதையாவது வாசிக்க தூண்டிக்கொண்டே இருந்தான். என்னைவிட எனக்குள் இருந்தவனால் அதிகம் பாதிக்கப்பட்டது என் நண்பர்கள்தான். அடுத்தடுத்த நாட்களில் அவர்களின் சமையல் அதை எனக்கு குறிப்பால் உணர்த்தியது. எதற்கும் கவலைப்படாமல் ஏதோ ஒன்றை வாசித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி பள்ளிகளின் அரையாண்டு விடுமுறை வாயிலாக வந்தது. ஒரு ஆறு வயது குழந்தை அதற்கேற்றார்போல ஒரு குட்டி கிடாருடன் வகுப்பில் இருந்தது. அதுவும் சற்றே முதிர்ந்த வகையிலான கிடார் கையாளும் உடல்மொழிகளுடன். அடுத்தடுத்த வகுப்புகளில் இவ்வகையான குட்டிச்சாத்தாங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. அந்த குட்டிச்சாத்தாங்களின் விரல்களில் நாட்டியமாடும் சரஸ்வதி என் விரல்களில் ஏனோ விளையாட மறுத்தாள். திடீரென ஒரு சிறுவன் 'முன் தினம் பார்த்தேனே' பாடலை வாசிக்க மாஸ்டரோ மெய்மறந்து ரசித்தார். இதனால் எனக்கு வகுப்புக்கு வருவதற்கே சில சமயங்களில் பிடிக்காமல் போனது. வாரத்திற்கு மூன்று நாட்களும் சென்று கொண்டிருந்த நான் இப்போது இரண்டு முறை போவதேன்பதே அரிதாகி விட்டது.



ஆறாவது வாரம், ஒரு முடிவுடன் வகுப்பை நோக்கி சென்றேன். வகுப்பறையின் வாசலில் என் தன்மானத்திற்கும், படைப்பாளிக்கும் ஒரு மஹா யுத்தமே நடந்துகொண்டிருந்தது. இயல்பாகவே மயிர் நீப்பின் வாழா கவரி மா மனத்தால் படைப்பாளி வெகு விரைவாய் சரணடைந்தான். அப்படைப்பாளியின் ஆத்ம திருப்திக்காக கிடாருடன் வகுப்பறையில் இருந்த கடைசியாக ஒரு போட்டோ எடுத்து அதை பிரேம் செய்து மாட்டி வைத்திருக்கிறேன். திடீரென வெளிப்படும் மல்டிபல்- பெர்சனாலிட்டி டிஸ்-ஆர்டரை போல அந்த படைப்பாளி எப்போதாவது அந்த தூசி படிந்த கிடாரை பார்க்கும்போதெல்லாம் வெளிவருகிறான். அவன் வெளிவரும்போதெல்லாம் அவனை வரவேற்க நண்பர்களின் சமையல் தவறியதே இல்லை..



Saturday, March 17, 2012

மார்ச் 18 - மெரீனா


சாதாரணமான ஒரு பார்வையாளனாக இது நாள் வரை இலங்கை சோகங்களை பார்த்துகொண்டு (மட்டும் ) இருந்த சராசரி இந்தியன் இந்த முறை சற்றே கோபமடைந்திருக்கிறேன்.  எந்த ஒரு மனிதனின் இதயத்தையும் உடைக்கும் விடியோக்களை சேனல் 4 வெளியிட்ட பிறகும் சாதரணமாக பாட்டு டெடிகட் செய்ய என் தமிழக தமிழர்களால் எப்படி முடிகிறது.. முள்வேலிக்குள் அடைபட்டு நிற்கும் மக்களின் கண்களின் தெரியும் எதிர்காலத்தை பற்றிய கேள்விக்கு சர்வதேச சமுதாயம் வேண்டாம், சக தோழனாய் நீ எப்போது ஆறுதல் சொல்ல போகிறாய்?. 40 கிலோமீட்டருக்கு அந்த பக்கம் மரண ஓலங்களின் சத்தம் காதைகிழிக்கும்போது கூட இயல்பை வெளிப்படுத்தும் கலையை எங்கே கற்றுக்கொண்டார்கள் எம் தமிழர்கள்.. உங்களை சொல்லி குற்றமில்லை, உங்களை வார்த்தெடுத்த தலைமுறையின் குற்றம் அது. இனியொரு தலைமுறை அப்படி இருக்காது. இறந்து போன மக்களுக்காக பேசி என்ன ஆகபோகிறது என்று கேட்கும் தமிழர்களுக்கு என் பதில், இனியும் இந்த கோரங்களுக்கு மௌனசாட்சியாய் நாம் இருந்தால் மிச்சம் இருக்கும் என் இன மக்களுக்கு விடியல் என்பதே இருக்காது.
  
 இதுவரை எந்த ஒரு விஷயத்துக்காகவும் வீதிக்கு வந்து எதிர்ப்பை தெரிவிக்காத இருபத்தி நான்கு வயது தமிழன் நான்.  இன்று மெரினாவுக்கு செல்லலாம் என இருக்கிறேன். மனிதனை மனிதனாக மதிக்காத சமூகத்துக்கு இன்னும் வக்காலத்து வாங்கும் இந்திய அரசிற்கு என் எதிர்ப்பை இறையாண்மைக்கு உட்பட்டு பதிவு செய்யப்போகிறேன்..


இணைவோம்!!! தமிழுக்காக, இனத்துக்காக என்றெல்லாம் அழைக்கவில்லை. மனிதத்துக்காக..  #KillingFields

Thursday, July 8, 2010

மறுபடியுமா???

எதேச்சையாக தான் அந்த செய்தியை பார்த்தேன். பதறிவிட்டேன். இலங்கை கடற்படை அத்துமீறல்; தமிழக மீனவர் பலி. செய்தி ஏற்படுத்திய வலியை, தாக்கத்தை விட அதன் பின் விளைவுகள் தான் என்னை பின்னூட்டமிட வைத்து விட்டன.

எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். நாளை மறுநாளைய தினசரிகளில், முக்கியமாக மூன்றால் பக்கத்தில், தமிழக முதல்வர் கையில் பேனாவுடன் காட்சி கொடுப்பார்; கடிதம் எழுதி இருக்கிறேன் உடன்பிறப்பே என்பார். எல்லாம் தல விதிடா சாமி, கேட்டுத்தான் ஆகணும்.

இவரு எழுதுற  கடுதாசி எல்லாம் எங்கே தான் போகுதுனே தெரில.  இந்திய அஞ்சல் துறையை கேட்டால் நன்று என யோசித்தால், அந்த துறையின்  அமைச்சர் உயர்திரு அறுபதாயிரம் கேடியாக  இருக்கிறார். அவருக்கு கரோடியவுடன் பேசவே நேரம் போதவில்லை. பிறகு எங்கே கடிதத்தை தேட போகிறார்.

"எனது மிச்சமிருக்கின்ற லட்சியங்களான, புதிய சட்டசபை வளாகம், அண்ணா துரையின் பெயரிலான புதிய நூலகம், உலக தமிழ் செம்மொழி மாநாடு ஆகியவை முடிந்த பின், பதவியில் இருந்து விலகி உங்களில் ஒருவனாகப் போகிறேன்" என்று வாய்கிழிய பேசினார் பாச தலைவர்.  ( http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5929&ncat=&archive=1&showfrom=12/13/2009)
அப்பாடா!! இனிமேலாவது என் தமிழ்நாட்டை ஒரு இளைஞர் (அதாங்க, இளைஞரணி  தலைவர் திரு மு க ஸ்டாலின் (வயது 57) )  கையில் வர போகிறது என்று எண்ணினேன். ஆனால்,உலக தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த அடுத்த நிமிடமே இப்படியும் கூறினார்;உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என்று நான் கூறியதற்கு ஓய்வு பெறப் போவதாக அர்த்தமில்லை. நான் ஓய்வுபெற வேண்டும் என நீங்கள் (செய்தியாளர்கள்) கூறினால் ஓய்வெடுக்கத் தயாராக உள்ளேன். நான் விலகியிருக்கட்டுமா? என்றார் சிரித்தபடியே.(http://thatstamil.oneindia.in/news/2010/06/28/never-said-retire-karunanidhi.html  )

இதை பார்த்தவுடனே தீவிர கவுண்டர் ரசிகனான எனக்கு ஒன்றே ஒன்று தான் நினைவுக்கு வருகிறது; 'இது உலக நடிப்புடா சாமி!!!!' ஆனாலும் இதனையும் வரவேற்று வாழ்த்து பாட ஒரு கூட்டமே தயாராய் இருக்கும், வைரமுத்து தலைமையில் ஜெகத்ரட்சகன் முன்னிலையில்.  முடிந்தால் முடிவை மறுபரிசீலனை செய்த முத்தமிழ் அறிஞருக்கு பாராட்டு விழவே நடத்தும், நமீதா குஷ்பூ உடன்.
கழக தொலைகாட்சியில் பார்த்து நாமும் களிப்படைவோம். 

உலத்திலேயே முதல் முறையாக ஒருவருடைய, ஒரு தனி மனிதனுடைய குடும்பத்திற்கு family tree  இருப்பது இவருக்கு மட்டும் தான்.


இவர்கள் யாரை பற்றியும் அறிமுகம் எழுத தேவை இல்லை. 23  வயதில் பல கோடி செலவு செய்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை விலைக்கு வாங்குகிறார் ஒருவர். அம்பானி பேரனா என்று பார்த்தால், இல்லை. அண்ணா பல்கலை கழகத்தில் படிப்பை பாதியில் விட்டவர்; அண்ணன் அஞ்ச நெஞ்சனின் மகன் தான் அவர். ஏன்டா, இவங்க வீட்டுல எல்லாம் வருமான வரி துறை சோதனையே வராதா? எல்லாம் தாத்தா இருக்கிற தெகிரியம்.

சரி, தனி மனித தாக்குதல்கள் வேண்டாம் என்றால், தமிழக முதல்வரின் கடந்த சில நாட்களின் செயல்பாடுகளை பார்ப்போமா???

ஐயோ சாமி பெட்ரோல் வெல எரிடுசுனு எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துதுன்னு சொன்னா, நம்ம தலைவர் கேரளா, மேற்கு வங்கத்துல என்ன செஞ்சாங்கன்னு கேக்குறார். அண்ணே நீங்க தமிழ் நாட்டு முதல்வர். இப்போ நாங்க கேக்குறோம், நீங்க என்ன செஞ்சீங்க?? இந்தியாவுலையே நம்ம மாநிலத்துக்கு தான் ரெண்டாவது இடம், வேற எதுலயும் இல்ல, பெட்ரோல் மேல போட்ற வரியில. விளங்கிடுவோம்ல!!!

கோடநாடு எஸ்டேட்டுக்கள் தேயிலை தொழிற்சாலை கட்டப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளதால், இதிலே உள்ள உண்மைகளை நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைக் கொண்டு விசாரித்து உண்மை விவரங்களை அரசுக்கு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விசாரிக்க சொன்னாலே விஷத்தை கக்குகிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இல்ல. எங்களுக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி, spectrum மேட்டர்ல.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் மதுபான ஆலை குறித்து ஜெயலலிதா பேசத் தயாரா. அதுதொடர்பான புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கத் தயாரா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுல என்னய்யா பேச வேண்டியிருக்கு?? தப்புன்னு தெரிஞ்ச தூக்கி உள்ள போடுங்கப்பா. என்ன ஒரு பஸ் தானே எரிய போகுது. போயிட்டு போகுது.

சென்னை: ஒரு ரூபாய்க்கு அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருள்கள், பஸ் கட்டணத்தை உயர்த்தாதது போன்ற செயல்கள் மூலம் விலைவாசி உயர்வின் பாதிப்பு சாதாரண மக்களிடமிருந்து திமுக அரசு அகற்றிவிட்டதால் தான் பாஜக- அதிமுக- கம்யூனிஸ்டுகள் கூட்டணி நடத்திய `பந்த்' வெற்றி பெறவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  "நீங்க சொன்னா வாக்கியத்த தஞ்சாவூர் கோயில்................. "

இவரு ஒண்ணுமே நல்லதே செய்யலியா அப்டின்னு கேட்டா, செஞ்சுருக்கார். மாற்று திறனாளிகளுக்கு திருமண நிதி உதவி உயர்வு.  பாராட்டுகிறேன்..

கடைசியாக,
இவரை பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பல முறை யோசித்து பார்த்தேன். என்னை விட நான்கு மடங்கு வயதில் மூத்தவர். தமிழக அரசியலில் எழுபத்தி ஐந்து வருடங்களாக இருப்பவர், சட்ட சபையிலே பொன் விழா கண்டவர், இரண்டு முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்க காரணமாய் இருந்தவர், அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுப்பவர், சிறந்த ராஜதந்திரி இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர் தவறு செய்யும்போது எல்லாம் கேள்விகேட்க வேண்டியவர்கள் அமைதியை இருப்பதே எனக்கான தகுதியை நினைக்கிறன்; எழுதுகிறேன். எழுதுவேன்....