Thursday, May 17, 2012

கிடார் குறிப்புகள்...


சரியாக 2008ம் வருடம், நவம்பர் என்று நினைக்கிறேன். வாரணம் ஆயிரம் என்ற சூரியா நடித்த படம் திரைக்கு வந்தது. சென்னை எனக்கு பழக்கமாக ஆரம்பித்திருந்த காலம்.. கொஞ்சம் ஐடி வாசனையும் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்த நேரமது. குரோம்பேட் வெற்றி திரை அரங்கில் வாராந்திர பாஸ் வைத்திருந்த சூழலில் அந்த படத்தை முதல் சனிக்கிழமை மாலைக்காட்சி பார்த்ததில் வியப்பேதும் இல்லை. படம் என்னவோ அப்பா-மகன் பாசத்தை பற்றியதுதான் என்றாலும் அன்னப்பறவை போல பிரித்தறிந்து நான் உள்வாங்கிக்கொண்ட ஒரே விஷயம் கிட்டார். படம் முடிந்த பிறகு நான் செய்த முதல் விஷயம் கிடாருக்கான ஸ்பெல்லிங் தேடியதுதான்.


இச்சமயத்தில் ஐடி ரெசெஷன் ஆரம்பித்து பெஞ்ச் தேய்க்க ஆரம்பித்திருந்தேன். முழுநேர ஓய்வுக்கு இடையில் ஓய்வு கெடைக்கும்போதெல்லாம் கிடார் பற்றிய வீடியோக்களை யூட்யூப்பில் பார்ப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தேன். பின்னர் வியர்வை வழிய கூகிளில் அலைந்து திரிந்து ஒரு கிடார் மாஸ்டர் தாம்பரத்தில் இருப்பதை தெரிந்துகொண்டேன். இன்னமும் ஆரம்பிக்காத எக்ஸாமுக்கு அடிஷனல் ஷீட் கேட்கும் ஆர்வக்கோளாறாய், மூன்று மாத அட்வான்ஸ் ஃபீஸ் கட்டி சேர்ந்துவிட்டேன். வாரத்திற்கு மூன்று நாள் கிடார் க்ளாஸ் என ஆறு மாதத்தில் கிடார் வாசிக்க கற்றுக்கொள்ளலாம் என்ற மாஸ்டரின் வார்த்தைகள் தலைகால் புரியாமல் ஆட வைத்தது.


முதல்நாள் மியூசிக் கிளாஸ்.. நான் எதிர்பார்த்தை போலவே எல்லாரும் ஆண்கள். என்னை விட சிறியவர்கள். தவிரவும் கையில் ஒரு கிடாருடன் வட்டவடிவமாக உட்கார்ந்து மின்னலே படத்திலிருந்து 'இரு விழி உனது' பாடலை வாசித்துக்கொண்டிருந்தார்கள். இப்போதுதான் கல்லூரியில் அடியெடுத்த வைத்தவனைப்போல இருந்த ஒருவன் திடீரென என்னைப்பார்த்து "அண்ணா, நீங்க எந்த இயர்?" என்றான். பைனல் இயர் என்று கூறி ஒருவாறாக சமாளித்துக்கொண்டேன்.என்னைபோலவே கிடரை எப்படி பிடிக்க வேண்டுமென கூட தெரியாத இருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.கிடாரின் அனாடமி பற்றிய படங்களோடு அன்றைய வகுப்பும், மாஸ்டர் தரும் கிடாரில் ஜின்கிள் பெல் வாசித்தே முதலிரண்டு வாரங்களும் கடந்தன.

இதற்கிடையே எந்த பாடலை கேட்டாலும் அதில் கிடார் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என மனம் ஆராயத்தொடங்கி இருந்தது.சில புதிய நண்பர்களின் பழக்கதோஷத்தால் சி மேஜர், எ மைனர் போன்ற வார்த்தைகள் பழக்கமாயின . மூன்றாவது வாரத்தின் முதல்நாளில் எனக்கொரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடன் கிடார் வாசிக்க கற்றுக்கொள்ள ஆரம்பித்த ஒருவன் திடீரென நெஞ்சிக்குள் பெய்திடும் மாமழை பாடலின் ஆரம்ப இசையை வாசித்துக்காட்டினான். ஆச்சரியல் மேலிட அவனை விசாரித்தபோது, தன்னிடம் சொந்தமாக கிடார் இருப்பதால் இடைவிடாமல் பயிற்சி செய்து கற்றுக்கொண்டதாக தெரிவித்தான். எனக்குள் இருந்த படைப்பாளி பெருங்குரலெடுத்து கூச்சலிட ஆரம்பித்தான். இரண்டு வாரங்கள் முடிந்தும் இன்னும் ஜிங்கில் பெல்லிலே ததிங்கினத்தோம் போடுவதற்கு காரணம் சொந்தமாக கிடார் இல்லாததே என முடிவுக்கு வந்துவிட்டான் அந்த படைப்பாளி. அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த படைப்பாளி என்னை கொண்டு போய் நிறுத்திய இடம் - வடபழனி லக்ஷ்மன்சுருதி. எல்லா கிடாருமே நன்றாக இருந்தாலும் விலை தவறாக பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதாக பர்ஸ் எண்ணியதால், அதே பகுதியிலுள்ள சரஸ்வதி இசைக்கூடத்திற்கு சென்று, என் பர்சுக்கும் படைப்பாளிக்கும் பிடித்த வகையிலான ஒரு கிடாரை வாங்கிகொண்டு பெருமிதம் வழிய அடுத்த வகுப்பிற்கு சென்றேன்.எவ்வளவு முயன்றும் ஜிங்கில் பெல்லை தாண்டுவது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது

மூன்றாவது வாரத்தில் சில பல மேஜர், மைனர் நோட்களை நோட்ஸ் பார்த்தும் தப்பும் தவறுமாக வாசிக்க பழகிக்கொண்டிருந்தேன். நாள் தவறாமல் கிடாருடன் ஒரு போட்டோ எடுப்பதை வழக்கமாக்கி இருந்தேன். எனக்குள் இருந்த படைப்பாளி நேரம் காலம் இன்னதென்று இல்லாமல் எந்நேரமும் எதையாவது வாசிக்க தூண்டிக்கொண்டே இருந்தான். என்னைவிட எனக்குள் இருந்தவனால் அதிகம் பாதிக்கப்பட்டது என் நண்பர்கள்தான். அடுத்தடுத்த நாட்களில் அவர்களின் சமையல் அதை எனக்கு குறிப்பால் உணர்த்தியது. எதற்கும் கவலைப்படாமல் ஏதோ ஒன்றை வாசித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி பள்ளிகளின் அரையாண்டு விடுமுறை வாயிலாக வந்தது. ஒரு ஆறு வயது குழந்தை அதற்கேற்றார்போல ஒரு குட்டி கிடாருடன் வகுப்பில் இருந்தது. அதுவும் சற்றே முதிர்ந்த வகையிலான கிடார் கையாளும் உடல்மொழிகளுடன். அடுத்தடுத்த வகுப்புகளில் இவ்வகையான குட்டிச்சாத்தாங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. அந்த குட்டிச்சாத்தாங்களின் விரல்களில் நாட்டியமாடும் சரஸ்வதி என் விரல்களில் ஏனோ விளையாட மறுத்தாள். திடீரென ஒரு சிறுவன் 'முன் தினம் பார்த்தேனே' பாடலை வாசிக்க மாஸ்டரோ மெய்மறந்து ரசித்தார். இதனால் எனக்கு வகுப்புக்கு வருவதற்கே சில சமயங்களில் பிடிக்காமல் போனது. வாரத்திற்கு மூன்று நாட்களும் சென்று கொண்டிருந்த நான் இப்போது இரண்டு முறை போவதேன்பதே அரிதாகி விட்டது.ஆறாவது வாரம், ஒரு முடிவுடன் வகுப்பை நோக்கி சென்றேன். வகுப்பறையின் வாசலில் என் தன்மானத்திற்கும், படைப்பாளிக்கும் ஒரு மஹா யுத்தமே நடந்துகொண்டிருந்தது. இயல்பாகவே மயிர் நீப்பின் வாழா கவரி மா மனத்தால் படைப்பாளி வெகு விரைவாய் சரணடைந்தான். அப்படைப்பாளியின் ஆத்ம திருப்திக்காக கிடாருடன் வகுப்பறையில் இருந்த கடைசியாக ஒரு போட்டோ எடுத்து அதை பிரேம் செய்து மாட்டி வைத்திருக்கிறேன். திடீரென வெளிப்படும் மல்டிபல்- பெர்சனாலிட்டி டிஸ்-ஆர்டரை போல அந்த படைப்பாளி எப்போதாவது அந்த தூசி படிந்த கிடாரை பார்க்கும்போதெல்லாம் வெளிவருகிறான். அவன் வெளிவரும்போதெல்லாம் அவனை வரவேற்க நண்பர்களின் சமையல் தவறியதே இல்லை..7 comments:

சமுத்ரா said...

ha ha good experience:)

Rajan said...

அருமையாக எழுத வருகிறது!!! சிறுகதைகள் முயற்சியுங்கள்! வாழ்த்துகள்

அன்பின்

ராஜன்

ILA(@)இளா said...

அட பின்றீங்க :)) டுபுக்கு எழுதினாப்லையே இருந்துச்சு

jeganjeeva said...

அருமை. இப்பிடித்தான் நான் கராத்தே கத்துக்கணும்ன்னு கிளம்பி.......

என்ன நீங்க போட்டோ எடுத்து ஃபிரேம் பண்ணி வச்சுருக்கீங்க. நான் எடுக்கல. அவ்ளோதான்.

செம!!! :)

dhana said...

//சமுத்ரா said...
ha ha good experience:) ///

கிட்டாரை மறந்தாலும் அந்த குட்டிச்சாத்தானை எப்போதும் மறக்கமுடியாது...

///Rajan said...
அருமையாக எழுத வருகிறது!!! சிறுகதைகள் முயற்சியுங்கள்! வாழ்த்துகள்

அன்பின்

ராஜன்//////

நன்றி ராஜன்.. சிறுகதையுடன் சந்திக்கிறேன்...

////ILA(@)இளா said...
அட பின்றீங்க :)) டுபுக்கு எழுதினாப்லையே இருந்துச்சு////

அவ்வவ்... அவரைப்போல் நானா?!! நன்றி விவாஜி....

////jeganjeeva said...
அருமை. இப்பிடித்தான் நான் கராத்தே கத்துக்கணும்ன்னு கிளம்பி.......

என்ன நீங்க போட்டோ எடுத்து ஃபிரேம் பண்ணி வச்சுருக்கீங்க. நான் எடுக்கல. அவ்ளோதான்.

செம!!! :)//////
நன்றி தல... இன்னும் நெறையா இருக்கு தல... பிட்னஸ் கிளாஸ் எல்லாம் எழுதினா... வேணாம் விட்ருங்க... :)

Pandian Vijay said...

chance eh illa da... sema ya irukku..

NANBENDA...

Venkat said...

very nice da....:)