Saturday, June 21, 2014

நிறமி

பரபரப்பாக இயங்க தயாராகிக் கொண்டிருக்கும் திருப்பதி கோர்ட்..

கொஞ்சமும் கோர்ட் சூழலுக்கு சம்பந்தமே இல்லாமல் வெள்ளிக்கிழமை ஐடி ஊழியனாக அங்கே நான். ஏன் எதற்கென்ற கேள்வியே கேட்காமல் 'மச்சான் கெளம்புடா' என்ற ஒற்றை வார்த்தைக்கு மரியாதை கொடுத்து கூட வந்த என் நண்பன். அனேகமாக அந்த கோர்ட்டையே அன்றைக்கு திறந்து வைத்தது நாங்களாகத் தான் இருப்போம். சிறுவர் சிறைச்சாலையும் கோர்ட்டும் ஒருங்கிணைந்த ஆங்கிலேய பாணியிலான அரத பழசான கட்டிடம் அது. அடைக்கலம் கொடுத்தது அங்கிருந்த பழுப்பேறிய பெஞ்ச் . கரையும் காகங்களையும், காற்றடித்தால் மட்டும் பேசி சிரித்துக்கொள்ளும் அரச மர இலைகளையும் எங்களையும் தவிர அங்கே வேறாரும் இல்லை.  சிறிது நேரம் கழித்து ஒரு பெண்மணி கோர்ட் வளாகத்தை சுத்தப்படுத்த ஆரம்பித்திருந்தாள். அவள் சுத்தப்படுத்துவது நிறமிழந்த அரச மர இலைகளை மட்டுமல்ல - வழக்கறிஞர்கள் வாரியிறைத்திருந்த பொய்களையும் சேர்த்து தான். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. காவல் நிலைய படிகளையோ, கோர்ட் வாசலையோ மிதிக்காத குடும்பத்தைச் சேர்ந்த என்னை கைதியாக்கி அழகு பார்த்திருக்கிறது - அதுவும் மொழி தெரியாத மாநிலத்தில். கடிவாளமில்லா சிந்தனை அலைகளோடு மோட்டுவளையை வெறித்துக்கொண்டிருக்கிறேன்.

"என்ன மச்சான்.. இந்த தடவையாவது ஜட்ஜ்மென்ட் சொல்வாங்களா?.. இல்ல வாய்தா தானா?"- மவுனம் கலைத்தான் நண்பன்.

பதிலேதும் சொல்லவில்லை. உண்மையில் பதிலேதும் என்னிடம் இல்லை. இது ஐந்தாவது வாய்தா. அந்த சம்பவம் நடந்து ஐந்தாறு மாதங்கள் இருக்கும். திருமலையிலிருந்து  திருப்பதி செல்லும் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் 29 வது கொண்டை ஊசி வளைவில் பள்ளத்தில் உருண்டது - வழக்கு பதிந்து, டிரைவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்ற செய்தி கண்டிப்பாக உள்ளூர் செய்தி தாள்களில் இடம்பிடித்திருக்கும். என்ன செய்ய, என் சாதனையை என்னாலேயே படித்து தெரிந்துகொள்ள முடியவில்லை. மொழியைத் தான் சபிக்க வேண்டியிருக்கிறது. தெலுங்கானா போராட்டம் - வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு இன்ன பிற இன்னல்களையும் தாண்டி பெயில் வாங்கிய காட்சிகள் ரோலர் கோஸ்டராய் சுழன்றடித்தது நினைவுகளில். இரண்டு பேர் மட்டும் இருந்த அந்த இடத்தில் இப்போது புதிதாக இன்னும் நான்கைந்து தெலுங்கு முகங்கள். கையில் தூக்கு வாளியுடன் எதையோ எதிர்பார்த்த படி ஒரு நடுத்தர வயது பெண்ணும்.

நேரம் ஆக ஆக பரபரப்பு தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த கூட்டம் இப்போது ஆலமர விழுதுகளைப் போல மாறிவிட்டிருந்தது. ஒவ்வொரு சிறு கூட்டமும் ஒரு வக்கீலைப் பிடித்து மொய்த்துக்கொண்டிருந்தது. நானும் எனது வக்கிலைத் தேடினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரின் சுவடுகள் தென்படவே இல்லை. செல்போனில் தொடர்பு கொண்டேன் - "சார். ஐ யாம் தனா. க்ரைம் நம்பர் 28/13. பிளாக் கலர் கார் - ஆக்சிடன்ட் திருமலா " - மூன்றாம் பிறை சுப்புரமனியாகவே மாறிவிட்டிருந்தான். "ஆவுனா. நீங்கொ அக்கடையே கூச்சண்டி. கமிங் கமிங்" அவருக்கு தெரிந்த தமிழில்.

இதற்கிடையே கோர்ட் கான்ஸ்டபிள் முனீஸ், வழக்கமான சிரிப்போடு நெருங்கிவிட்டிருந்தார். வக்கிலை விட இவர் பேசும் தெலுகுத்தமிழ் எனக்கு ரொம்பவே பழக்கமாயிருந்தது. "தன்செகார், டோன்டி எய்ட் தான. இன்னிக்கு முட்ச்சிட்லாம்...". பலமுறை கேட்ட வசனம் தான். முதல் முறை போலவே தலையாட்டி வைத்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறைக்கு முன்பாக இருப்பதை போன்றதொரு உணர்வு. இன்னைக்கு கேஸ் முடிஞ்சிட்டா, இதுக்கப்புறம் இந்தபக்கமே வரக்கூடாது என்ற சபதத்தை ஐந்தாவது முறையாகவும் எடுத்துக்கொண்டேன்.  எல்லாரும் அவரவர் வக்கீலுடன் ஆலோசித்தபடி இருக்க அந்த தூக்குவாளி பெண் மட்டும் யாருடனும் எதுவும் பேசாமல் இருந்தார். ஊமையாய் இருக்கும்போல என நினைத்துக்கொண்டு வக்கீலுக்காக வழி பார்த்துக்கொண்டிருந்தான் .

 கான்ஸ்டபிள் முனீஸ் என்னையும், இன்னும் மூன்று பேரையும் மட்டும் அழைத்தார். முதலில் கிரிமினல் கேஸ்கள் விசாரிக்கப்படும். பிறகு டிராபிக் கேஸ்கள். இதுதான் அந்த அழைப்பின் சாராம்சம். இதைப்போலவே கிரிமினல் கேஸ்களுக்கென ஒரு கோர்ட் கான்ஸ்டபிள் அவருடைய அன்றைய வாடிக்கையாளர்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார். இரு அழைப்புகளிலுமே அந்த தூக்குவாளி பெண் இல்லை. இது எதோ அம்மன் கோயில் கிழக்காலே கதையாக இருக்குமோ என்ற ஆவல் இன்னும் அதிகமாகவே அந்த பெண்மணியை கவனிக்க ஆரம்பித்தான். ஓடிசலான தேகம். சொல்லிக்கொள்ளுமளவுக்கு அணிகலன்கள் இல்லை. அநேக கோயில்களில் தென்படும் பூ கட்டும் அம்மா சாயலில் தான் இருந்தார். நெருங்கி பேசலாம் தான். ஆனால் மொழி?!.

     எனக்கிருக்கும் வினோதமான பழக்கங்களில் ஒன்று இது. சில சமயங்களில் பேருந்து பயணங்களின்போது ஜன்னல் வழியே எட்டி பார்ப்பதுண்டு. எதிர்படும் வித்தியாசமான மனிதரின் பார்வையில் உலகம் அடுத்த சில நொடிகள் எப்படி இயங்கும் என்பதை மனத்திரையில் ஓட்டிப்பார்ப்பேன்.  விநோதமாய் இருந்தாலும், வேடிக்கையாய் இருக்கும். ஆனால் இந்த பெண், கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக பரபரப்பான கோர்ட் வாசலில் ஒரு ஜென் துறவியைப் போல இருக்கிறார். அடுத்து என்ன செய்வார் என்பதே யூகிக்க முடியவில்லை.


'சைலன்ஸ்..' டவாலியின் குரல். அந்த சில நூறு பேர் கொண்ட கூட்டத்தின் வழியே புகுந்து அமைதியை தேடிக்கொண்டுவந்தது. என் சிந்தனைக் குளத்திலும் கல்லெறிந்தது. இது வழக்கமாக நீதியரசரின் வருகையை அறிவிக்கும் ஒரு வழி. பக்கத்திலிருந்த சிறுவர் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்து இப்போது மன்ற வாசலுக்கு முன் நிறுத்தப்பட்டனர். ஐந்து சிறுவர்கள், தலை வாரி எப்படியும் நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம். ஒரே நீண்ட சங்கிலியால் ஐவருமே பினைக்கப்பட்டிருந்தனர். ஒருவனுக்கு தலையை சுற்றிலும் பெரிய மருதுவக்கட்டு. பெரும்பாலும் கிழிசலான, அழுக்கான உடைகள் தான். முன்னைக்காட்டிலும் கோர்ட் அதிக பரபரப்படைந்திருந்தது இப்போது. நீதியரசரும் இன்னபிற வக்கீல்களும் கன நேரத்தில் ஆஜராகிவிட்டிருந்தனர். வழக்காடும் காட்சிகள் ஆரம்பமாகிவிட்டன. 'வேங்கடகிருஷ்ணன் வகையராலு...' டவாலியின் குரல். நான்கு ஆஜானுபாகுவான ஆட்கள் குடுகுடுவென ஓடி நீதியரசர் முன்பு கை கூப்பி நின்றனர். அதிகமாக தமிழ் சினிமா பார்ப்பவர்களால் உண்மையான கோர்ட் சீன்களை உடனடியாக ஜீரணிக்க முடியாது. தமிழ் சினிமா கற்றுக்கொடுத்த தவறான கற்பிதங்களில் முக்கியமானது  நீதிமன்றங்களும் வழக்காடும் காட்சிகளும் தான். உண்மையில் குற்றம் சாட்டப்பட்டவர், செருப்பு அணிந்திருக்கக் கூடாது, கை கூப்பிய நிலை தான் முழுவதும். ஒரு வழக்குக்கான அதிகபட்ச நேரம் என்பது குழந்தைகள் ஐஸ்க்ரீம் சாப்பிடும் நேரம் தான். பராசக்தி பாணி வசனங்களை படிக்கவோ கேட்கவோ வாய்ப்பே இல்லை.

சுமார் இருபது நிமடங்களில் கூட்டம் கணிசமாய் குறைந்திருந்தது. என் வழக்கு அடுத்த வாய்தாவுக்கு தள்ளிபோடப்பட்டது. வழக்கு பரபரப்பில் சற்றே மறந்திருந்த அந்த தூக்கு வாளி பெண்ணை கண்கள் தேடியது. அதே இடத்தில் எதையோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார். கோர்ட் கான்ஸ்டபிளுக்கு அன்றைய கப்பத்தைக் கட்டிவிட்டு அந்த பெண்ணைப் பற்றி விசாரித்தேன். "அ அம்மாயி... பிச்சி சார்" என்று காதுக்கும் வலது கண்ணுக்கும் இடையே ஆட்காட்டி விரலை சுழற்றினார். சிறார் சிறையிலிருந்து சென்ற வாரம் தப்பி ஓடும்போது அவர் மகன் இறந்துவிட்டதாகவும், அந்த மகனுக்காக தான் தினமும் சாப்பாடு எடுத்துவருவதாகவும் சொன்னார். அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு காலம் காலமாக கிடைக்கக்கூடிய அடைமொழி இது தான். இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. மிகநீண்டதொரு பெருமூச்சுடன் கிளம்ப எத்தனிக்கிறேன்.

கடைசியாக ஒருமுறை அந்த பெண்ணை பார்க்கிறேன். வேகமாக மனத்திரை சுழல்கிறது. அந்த பெண்ணின் பார்வையில் அடுத்த சில நொடிகளில் உலகம், இறந்து போன அந்த மகனை கண்டிப்பாக உயிர்ப்பித்திருக்கும். அந்த தூக்கு வாளியின் கணமும் குறைந்திருக்கும்...