Friday, May 17, 2013

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..

        அலுவலக கடுப்புகளுக்கு இடையே [அலுவலகம்னாலே கடுப்பு தானே ] பாடல் கேட்கும் எண்ணம் மேலிட - எப்போதும் கேட்கும் எம்ஜிஆர் மெலடிக்கு பதிலாக நீண்ட நாட்களாய் தொடாமல் இருக்கும் ரகுமான் ஹிட்ஸ் ஆல்பத்தை ஓடவிட்டேன். கொலம்பஸ், என்ன விலை அழகே போன்ற நல்ல பாடல்களும் அலுவலில் மூழ்கி இருந்த என் காது சவ்வுகளை தாண்டவில்லை.திடீரென ஸ்வர வரிசைகளுடன் ஆரம்பமானது அந்த பாடல் - சௌக்கியமா  கண்ணே  சௌக்கியமா.. சடாரென பெய்தமழையில்  முழுதும் நனைந்த சாலைவாசியாகிப் போனது மனது. பாடல் முடிந்த பிறகு ஏதோ கர்நாடக கான சபையிலிருந்து திடீரென வெளித்தள்ளப்பட்டதைப் போன்றதொரு உணர்வு. பாடலை மறுபடியும் ஓடவிட்டு ரிப்பீட் மோட் தட்டிவிட்டேன்.

    இன்றைய தேதிக்கு அந்த படம் - பாடல் வெளியாகி எப்படியும் 15 வருடங்கள் ஆகியிருக்கும் . நானும் எத்தனையோ தடைவை இந்த பாடலை கடந்து [கவனித்து அல்ல ] வந்திருக்கிறேன் . நித்யஸ்ரீ-யின் கனீர் குரல் பாடலில் கட்டிப்போட்டுவிட்டதென்றால், வைரமுத்து  காதலில் நனைத்து எடுத்த பேனாவில் கவிதை எழுதியிருப்பார் போல. பேனா மை சுரக்கவில்லை. காதல் சுரந்திருக்கிறது. ரகுமானின் இசைக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாகவே காதலை சுரக்கும் பேனா அது. சவுக்கியமா கண்ணே என தலைவனை நலம் விசாரிக்கும் தலைவி சடசடவென ஸ்வர வரிசைக்குள்  புகுந்து  கண்ணில் விழுந்து இதயம் எழுந்து உயிரைப் பறித்த காதலைச் சொல்கிறாள் .

சௌக்கியமா கண்ணே 
சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
தன தன தோம் தனத்தோம் 
திக்கு திக்குதன தன தோம் தனத்தோம் 
திக்கு திக்குதன தன தோம் தனத்தோம்தன 
தன தோம் தனம்தோம்தா தீமினா
விழிகளில் நடனமி்ட்டாய் 
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்

வழக்கமாய் மாலைகள் தான் தழுவும். காதல் வந்த தலைவிக்கு அம்பு கூட தழுவத்தான் செய்கிறதாம். போலவே பருவம் கொத்திச்  சென்ற பறவை என தலைவனைச் சொன்னவர் சில பல ஸ்வர ஜதிகளை இட்டுநிரப்பி சலங்கையும் ஏங்குதே - அது கிடக்கட்டும் நீ சௌக்கியமா என்கிறார். நித்யஸ்ரீ விளாசிய இந்த சிக்சர் அலுவலக வேலையை சுத்தமாய் மறக்கடிக்க செய்திருந்தது. அதுவும் போகிறபோக்கில் சலங்கையும் ஏங்குகிறது - அது கிடக்கட்டும் நீ... என  மூச்சிழுத்து  பாடி என்னை வேறோர் உலகிற்கு அழைத்து சென்றுகொண்டிருந்தார்.. எழுத்துக்களை ரசிப்பதா இல்லை குரலை ரசிப்பதா என்ற குழப்பத்தில் ரகுமான் காணாமலே போயிருந்தார். 


ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்

சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ 
(சௌக்கியமா...)

சற்றே மூச்சு வாங்கி அடுத்தடுத்த வரிகளையும் கவனித்தேன். இதுவரைக்கும் பாடகியின்பால் பரிவு கொண்டிருந்த வைரமுத்து, இப்போது  சிக்சர்களாய்  விளாச ஆரம்பித்திருந்தார். சாம்பிளுக்கு சில..

சூரியன் வந்து வாவெனும் போது

என்ன செய்யும் இந்த பனியின் துளி...

என் காற்றில் சுவாசம் இல்லை...

பசலை நோய் பற்றி ஆயிரம் தமிழ் வாத்தியார்கள் அகநானூறு எடுத்தாலும் கீழே உள்ள வரிகளுக்கு ஈடாகுமா என்பது சந்தேகமே.. 

அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம்

வளையலாகவே துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமென அன்பே அழைத்தேன்     

மறுபடியும் நித்யஸ்ரீ ஸ்வர வரிசைக்கும் புகுந்து அந்த ரோலர் கோஸ்டர் ரைடை  முடித்து வைத்தார். சுமார் 7 மணி நேரமாக மனதுக்குள் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது இந்த பாடல் - ரிப்பீட் மோட் மாற்றக் கூட கை வாராமல்..